Thursday, June 25, 2009

மைக்கேல் ஜாக்சன்

இன்றைய பொழுது எனக்கு விடிஞ்சதே என்னோட இணையமையத்தில் வேலை பார்க்கும் பையன் அழைத்த அலைப்பேசி அழைப்பில் தான். என்னப்பா என்றேன். மைக்கேல் ஜாக்சன் இறந்துட்டாருன்னு எனக்கு மெசேஜ் வந்திருக்கு உண்மையான்னு கேட்டான். வாரி சுருட்டிக்கிட்டு எழுந்து தொலைக்காட்சியை போட்டேன். மாரடைப்பால் மைக்கேல் ஜாக்சன் மரணம்ன்னு என்.டி.டி.வில் செய்தி ஓடிக்கிட்டு இருந்துச்சு. எனக்கு பெரிய இடி. நான் நேசிக்கும் மிகச்சிறந்த இசைக்கலைஞன் மைக்கேல். அவரின் டேஞ்சரஸ் ஸ்டேஜ் ஷோ தான் நான் முதன் முதலில் பார்த்தது. கல்லூரிக்குச் செல்லும் வரை ஆங்கில பாப் பாடல்கள் கேட்டது கிடையாது. கல்லூரியில் தான் நண்பர்கள் மூலமாக ஆங்கில பாடல்கள் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் MJ வின் அறிமுகமும். நண்பர்கள் MJ என்று பேசிக்கொள்ளும் போதெல்லாம் ஒன்றும் புரியாது. பிறகு தான் சொன்னார்கள் MJ என்றால் Michael Jackson என்று. அவரின் ஒவ்வொரு பாடல்களாக தேடி எடுத்து கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் என்னை மிகவும் கவர்ந்தது All I want to say is that they don’t really care about us” என்று ஒரு பாடலை. அந்தப் பாடல் கறுப்பர்கள் அடிமையாக நடத்தப்படுவதை, ஒடுக்கப்படுவதை எதிர்த்து வரும் பாடல். ரொம்ப அருமையா இருக்கும். பல பிரச்சனைகள், பல உடல் உபாதைகள், சில வழக்குகள் என்று பிரச்சனைகளைச் சந்தித்த மனிதன். கடைசி காலத்தில் தனிமையில் விடப்பட்டவர். அவரின் நடனம் எத்தனையோ பேரை பாதித்தது. பல பாப் இசைக் கலைஞர்களின் ஆதர்ச நாயகன். அவரின் நடன அசைவுகளை கண்டு வியந்து போயினர் அனைவரும். மிகச் சிறந்த கலைஞன். வரும் ஜீலை மாதம் அவர் ஒரு come back ஷோ நடத்த இருப்பதாக அறிவிப்பு செய்திருந்தார். டிக்கெட் விற்பனை ஆரம்பித்த 3 மணி நேரத்தில் 70000 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. இந்த நிகழ்ச்சியை நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தேன். இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட போது அவருக்கு உடல்நிலை மோசமாகி இருந்து கொஞ்சம் சரியாகிவிட்டிருந்தது. அவருக்கு ஒன்றும் ஆகக் கூடாது. நிகழ்ச்சி நல்லபடியாக நடக்க வேண்டும், அவர் மறுபடியும் புதிதாக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். கடைசியில் இப்படி ஆகிவிட்டது... இதை எழுதிக்கொண்டிருக்கும் போது நான் முதன்முதலில் கேட்ட டேஞ்சரஸ் பாடல் என் கணினியில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவரின் இசைக்கு என்றுமே மரணம் இல்லை. அவர் ஆத்மா சாந்தி பெறட்டும்...

சிஸ்டர் பிரிட்ஜட்

என்னை எந்த ஆசிரியையுமே வகுப்பறையில் ஒரு பொருட்டாக கருதியதேயில்லை. நான் ஒரு சாதாரண மாணவன் பள்ளி நாட்களில் புத்திசாலி எல்லாம் இல்லை. என்னையும் ஒரு ஆளாக மதித்தது என்னுடைய ஐந்தாம் வகுப்பு தலைமை ஆசிரியை தான். சின்ன வயசில் நான் தேவாலயத்திற்கு நாள் தவறாமல் போவேன். ஐந்தாவது படிக்கும் போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலிக்குப் போவேன் அப்போ பக்தி கொஞ்சம் அதிகம். திருப்பலியில் பாடற்குழுவில் பங்கேற்று பாடுவேன். அப்போதுதான் என் பள்ளிக்கு சகாயமேரி சிஸ்டருக்கு பதிலாக பிரிட்ஜட் சிஸ்டர் தலைமையாசிரியையாக வந்தார்கள். பயங்கர கெடுபிடியான ஆள். அவுங்களைப் பார்த்ததுமே தெரிச்சு ஓடுவோம் நாங்கள். நான் கோயில் வேலைகளில் ஈடுபடுவதைப் பார்த்து என்னைப் பற்றி விசாரிக்கும் போது தான் நான் அந்தப் பள்ளியில் படிப்பதை அறிந்துகொண்டார்கள்.
ஒருநாள் Group study என்று சொல்லப்படும் குழுப்படிப்பு நடந்து கொண்டிருந்த போது பக்கத்து வகுப்பு ஆசிரியை என்னை அழைத்து சிஸ்ட்ர் உன்னைக் கூப்பிடுறாங்க வான்னு சொன்னாங்க. போகும் போது உனக்கு எப்படி சிஸ்டரைத் தெரியும் உனக்கு வேண்டியவுங்களான்னு கேட்டாங்க. அதெல்லாம் இல்லைன்னு சொன்னேன். சிஸ்டர் கூப்பிடுறாங்கன்னு கேட்டதுமே நாம ஒரு தப்பும் செய்யலையே. என்னப் பிரச்சனை என்று தான் மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. போய் பார்த்த போது, ஒவ்வொரு வருடமும் பள்ளியில் நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் நடக்கும் நாடகத்தில் புனித சூசையாக அதாவது இயேசுவின் தந்தையாக நடிக்க வைத்தார்கள். எனக்கு அப்போதெல்லாம் ஆங்கிலம் பேச வராது. அந்த நாடகம் ஆங்கில நாடகம். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அவர்கள் நடிக்க வைத்தது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். கடைசி வரைக்கும் எனக்கு வசனமே கொடுக்காமல் அமைதியாக நிற்க வைத்து விட்டனர். என்னுடைய கூச்சத்தைப் போக்கிய முதல் நிகழ்ச்சி இது.
எனக்கு தந்தை இல்லை என்ற விஷயம் கேள்விப்பட்டதும் என் மீதும் இன்னும் அதிகமாக அக்கறை எடுத்துக் கொண்டார்கள். பிறகு 6ம் வகுப்பு வேறு பள்ளிக்கு மாறியதும் அவர்களைச் சந்திப்பது குறைந்து போனது ஆனால் ஆலயத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் என்னுடைய பங்கு கொஞ்சமாவது இருக்கும. அப்போதெல்லாம் அவர்களைப் பார்த்துவிடுவேன். அவர்களும் என்னிடம் வாஞ்சையக பேசுவார்கள். அவர்கள் வேறு ஒரு ஊருக்கு மாற்றலாகிப் போனதும் சில வருடங்கள் அவர்களைச் சந்திக்க முடியாமல் போயிற்று. அவ்வப்போது எனக்குத் தெரிந்த கன்னியாஸ்திரிகளிடம் பிரிட்ஜட் சிஸ்டர் எங்க இருக்காங்க. எப்படி இருக்காங்கன்னு கேட்டு தெரிஞ்சுக்குவேன்.
பள்ளிப் படிப்பு முடிஞ்சு திருச்சி தூயவளனார் கல்லூரில் சேர்ந்தேன். கல்லூரி சேர்ந்ததும் சில மாதங்களுக்குப் பிறகு கிறித்துமஸ் விடுமுறையில் தஞ்சாவூர் வந்தேன். அப்போது உடல்நலம் சரியில்லாமல் சகோதரி பிரிட்ஜட் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டு அவர்களைப் பார்க்க சென்றேன். அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு செல்லும் போது எனக்கு பள்ளி ஆசிரியையாக இருந்த ஒருவர் அங்கு என்னைக்கண்டு “சிஸ்டரைப் பார்க்க வந்தாயா?” என்றார். ஆம் என தலையாட்டினேன். உடனே எனது ஆசிரியை “சிஸ்டருக்கு வயதான காரணத்தால் யாரையுமே நினைவில் இல்லை, அனைத்தும் மறந்துவிட்டது, உள்ளே சென்றதும் உன்னை யார் என்று அறிமுகப்படுத்திக்கொள்” என்றார். இது என்னடா வம்பாகப் போய்விட்டது என நினைத்துக் கொண்டேன். ஆனால் உள்ளே சென்றதும் என்னைப் பார்த்தவுடன் “வா சார்லி நல்லாயிருக்கியா? அம்மா எப்படி இருக்கு?” என அழைத்ததும் குதூகலம் தாங்கமுடியவில்லை. இத்தனை வருடத்திற்குப் பிறகும் நினைவில் வைத்திருக்கிறார்களே என்று நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது.
அதன்பிறகு 7 ஆண்டுகள் அவர்களைப் பார்க்கமுடியவில்லை. சென்னை வந்து வாழ்க்கை மாறிப்போனாலும், தஞ்சைக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அவர்ளைப்பற்றி விசாரித்து எங்கே இருக்கிறார்கள் என தெரிந்துகொள்ள முடிந்தது ஆனால் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புதான் கிடைக்கவில்லை. சொந்தமாக தொழில் தஞ்சையில் தொடங்கியதும் அவர்களைபற்றி விசாரித்தேன். வயதான துறவிகள் அமைதியாக பொழுதைக் கழிக்கவும், இறைவனைப்பற்றி எப்போதும் சிந்திக்கவும் அவர்களை ஊருக்கு வெளியே ஒரு பெரிய இல்லம் கட்டி, தங்க வைத்து இருக்கிறார்கள் என்றும், அங்கே சென்றால் தான் அவர்களைச் சென்று சந்திக்க முடியும் என்றும் கேள்விப்பட்டு சென்றேன். அங்கே சென்று பிரிட்ஜட் அம்மாவைப் பார்க்கவேண்டும் என்று சொன்னதும் உள்ளே சென்றார்கள் ஒரு இளம் துறவி. வயதானவர்களை கவனித்துக்கொள்ள இளம் துறவிகள் அங்கே பலர் உள்ளனர். சிறிது நேரத்தில் பிரிட்ஜட் அம்மா வந்தார்கள். எப்படிடா என்னைக் கண்டுபிடித்தாய், நான் இங்கு இருப்பதாக உனக்கு யார் சொன்னார்கள்? என்று கேட்டுக்கொண்டே வந்தார்கள். உங்களைப்பற்றி பல வருடங்களாக விசாரித்துக்கொண்டு இருக்கிறேன். கடைசியாக உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு இன்று தான் கிடைத்தது என்று சொன்னேன். மிகவும் மகிழ்ந்தார்கள். அடிக்கடி தொலைப்பேசியில் பேசு என்று சொல்லி, என்னை வாழ்த்தி அனுப்பினார்கள். தஞ்சையிலேயே இருப்பதால் அடிக்கடி சந்தித்துக் கொண்டு இருக்கிறேன்.