Thursday, June 25, 2009

மைக்கேல் ஜாக்சன்

இன்றைய பொழுது எனக்கு விடிஞ்சதே என்னோட இணையமையத்தில் வேலை பார்க்கும் பையன் அழைத்த அலைப்பேசி அழைப்பில் தான். என்னப்பா என்றேன். மைக்கேல் ஜாக்சன் இறந்துட்டாருன்னு எனக்கு மெசேஜ் வந்திருக்கு உண்மையான்னு கேட்டான். வாரி சுருட்டிக்கிட்டு எழுந்து தொலைக்காட்சியை போட்டேன். மாரடைப்பால் மைக்கேல் ஜாக்சன் மரணம்ன்னு என்.டி.டி.வில் செய்தி ஓடிக்கிட்டு இருந்துச்சு. எனக்கு பெரிய இடி. நான் நேசிக்கும் மிகச்சிறந்த இசைக்கலைஞன் மைக்கேல். அவரின் டேஞ்சரஸ் ஸ்டேஜ் ஷோ தான் நான் முதன் முதலில் பார்த்தது. கல்லூரிக்குச் செல்லும் வரை ஆங்கில பாப் பாடல்கள் கேட்டது கிடையாது. கல்லூரியில் தான் நண்பர்கள் மூலமாக ஆங்கில பாடல்கள் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் MJ வின் அறிமுகமும். நண்பர்கள் MJ என்று பேசிக்கொள்ளும் போதெல்லாம் ஒன்றும் புரியாது. பிறகு தான் சொன்னார்கள் MJ என்றால் Michael Jackson என்று. அவரின் ஒவ்வொரு பாடல்களாக தேடி எடுத்து கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் என்னை மிகவும் கவர்ந்தது All I want to say is that they don’t really care about us” என்று ஒரு பாடலை. அந்தப் பாடல் கறுப்பர்கள் அடிமையாக நடத்தப்படுவதை, ஒடுக்கப்படுவதை எதிர்த்து வரும் பாடல். ரொம்ப அருமையா இருக்கும். பல பிரச்சனைகள், பல உடல் உபாதைகள், சில வழக்குகள் என்று பிரச்சனைகளைச் சந்தித்த மனிதன். கடைசி காலத்தில் தனிமையில் விடப்பட்டவர். அவரின் நடனம் எத்தனையோ பேரை பாதித்தது. பல பாப் இசைக் கலைஞர்களின் ஆதர்ச நாயகன். அவரின் நடன அசைவுகளை கண்டு வியந்து போயினர் அனைவரும். மிகச் சிறந்த கலைஞன். வரும் ஜீலை மாதம் அவர் ஒரு come back ஷோ நடத்த இருப்பதாக அறிவிப்பு செய்திருந்தார். டிக்கெட் விற்பனை ஆரம்பித்த 3 மணி நேரத்தில் 70000 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. இந்த நிகழ்ச்சியை நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தேன். இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட போது அவருக்கு உடல்நிலை மோசமாகி இருந்து கொஞ்சம் சரியாகிவிட்டிருந்தது. அவருக்கு ஒன்றும் ஆகக் கூடாது. நிகழ்ச்சி நல்லபடியாக நடக்க வேண்டும், அவர் மறுபடியும் புதிதாக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். கடைசியில் இப்படி ஆகிவிட்டது... இதை எழுதிக்கொண்டிருக்கும் போது நான் முதன்முதலில் கேட்ட டேஞ்சரஸ் பாடல் என் கணினியில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவரின் இசைக்கு என்றுமே மரணம் இல்லை. அவர் ஆத்மா சாந்தி பெறட்டும்...

சிஸ்டர் பிரிட்ஜட்

என்னை எந்த ஆசிரியையுமே வகுப்பறையில் ஒரு பொருட்டாக கருதியதேயில்லை. நான் ஒரு சாதாரண மாணவன் பள்ளி நாட்களில் புத்திசாலி எல்லாம் இல்லை. என்னையும் ஒரு ஆளாக மதித்தது என்னுடைய ஐந்தாம் வகுப்பு தலைமை ஆசிரியை தான். சின்ன வயசில் நான் தேவாலயத்திற்கு நாள் தவறாமல் போவேன். ஐந்தாவது படிக்கும் போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலிக்குப் போவேன் அப்போ பக்தி கொஞ்சம் அதிகம். திருப்பலியில் பாடற்குழுவில் பங்கேற்று பாடுவேன். அப்போதுதான் என் பள்ளிக்கு சகாயமேரி சிஸ்டருக்கு பதிலாக பிரிட்ஜட் சிஸ்டர் தலைமையாசிரியையாக வந்தார்கள். பயங்கர கெடுபிடியான ஆள். அவுங்களைப் பார்த்ததுமே தெரிச்சு ஓடுவோம் நாங்கள். நான் கோயில் வேலைகளில் ஈடுபடுவதைப் பார்த்து என்னைப் பற்றி விசாரிக்கும் போது தான் நான் அந்தப் பள்ளியில் படிப்பதை அறிந்துகொண்டார்கள்.
ஒருநாள் Group study என்று சொல்லப்படும் குழுப்படிப்பு நடந்து கொண்டிருந்த போது பக்கத்து வகுப்பு ஆசிரியை என்னை அழைத்து சிஸ்ட்ர் உன்னைக் கூப்பிடுறாங்க வான்னு சொன்னாங்க. போகும் போது உனக்கு எப்படி சிஸ்டரைத் தெரியும் உனக்கு வேண்டியவுங்களான்னு கேட்டாங்க. அதெல்லாம் இல்லைன்னு சொன்னேன். சிஸ்டர் கூப்பிடுறாங்கன்னு கேட்டதுமே நாம ஒரு தப்பும் செய்யலையே. என்னப் பிரச்சனை என்று தான் மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. போய் பார்த்த போது, ஒவ்வொரு வருடமும் பள்ளியில் நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் நடக்கும் நாடகத்தில் புனித சூசையாக அதாவது இயேசுவின் தந்தையாக நடிக்க வைத்தார்கள். எனக்கு அப்போதெல்லாம் ஆங்கிலம் பேச வராது. அந்த நாடகம் ஆங்கில நாடகம். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அவர்கள் நடிக்க வைத்தது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். கடைசி வரைக்கும் எனக்கு வசனமே கொடுக்காமல் அமைதியாக நிற்க வைத்து விட்டனர். என்னுடைய கூச்சத்தைப் போக்கிய முதல் நிகழ்ச்சி இது.
எனக்கு தந்தை இல்லை என்ற விஷயம் கேள்விப்பட்டதும் என் மீதும் இன்னும் அதிகமாக அக்கறை எடுத்துக் கொண்டார்கள். பிறகு 6ம் வகுப்பு வேறு பள்ளிக்கு மாறியதும் அவர்களைச் சந்திப்பது குறைந்து போனது ஆனால் ஆலயத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் என்னுடைய பங்கு கொஞ்சமாவது இருக்கும. அப்போதெல்லாம் அவர்களைப் பார்த்துவிடுவேன். அவர்களும் என்னிடம் வாஞ்சையக பேசுவார்கள். அவர்கள் வேறு ஒரு ஊருக்கு மாற்றலாகிப் போனதும் சில வருடங்கள் அவர்களைச் சந்திக்க முடியாமல் போயிற்று. அவ்வப்போது எனக்குத் தெரிந்த கன்னியாஸ்திரிகளிடம் பிரிட்ஜட் சிஸ்டர் எங்க இருக்காங்க. எப்படி இருக்காங்கன்னு கேட்டு தெரிஞ்சுக்குவேன்.
பள்ளிப் படிப்பு முடிஞ்சு திருச்சி தூயவளனார் கல்லூரில் சேர்ந்தேன். கல்லூரி சேர்ந்ததும் சில மாதங்களுக்குப் பிறகு கிறித்துமஸ் விடுமுறையில் தஞ்சாவூர் வந்தேன். அப்போது உடல்நலம் சரியில்லாமல் சகோதரி பிரிட்ஜட் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டு அவர்களைப் பார்க்க சென்றேன். அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு செல்லும் போது எனக்கு பள்ளி ஆசிரியையாக இருந்த ஒருவர் அங்கு என்னைக்கண்டு “சிஸ்டரைப் பார்க்க வந்தாயா?” என்றார். ஆம் என தலையாட்டினேன். உடனே எனது ஆசிரியை “சிஸ்டருக்கு வயதான காரணத்தால் யாரையுமே நினைவில் இல்லை, அனைத்தும் மறந்துவிட்டது, உள்ளே சென்றதும் உன்னை யார் என்று அறிமுகப்படுத்திக்கொள்” என்றார். இது என்னடா வம்பாகப் போய்விட்டது என நினைத்துக் கொண்டேன். ஆனால் உள்ளே சென்றதும் என்னைப் பார்த்தவுடன் “வா சார்லி நல்லாயிருக்கியா? அம்மா எப்படி இருக்கு?” என அழைத்ததும் குதூகலம் தாங்கமுடியவில்லை. இத்தனை வருடத்திற்குப் பிறகும் நினைவில் வைத்திருக்கிறார்களே என்று நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது.
அதன்பிறகு 7 ஆண்டுகள் அவர்களைப் பார்க்கமுடியவில்லை. சென்னை வந்து வாழ்க்கை மாறிப்போனாலும், தஞ்சைக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அவர்ளைப்பற்றி விசாரித்து எங்கே இருக்கிறார்கள் என தெரிந்துகொள்ள முடிந்தது ஆனால் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புதான் கிடைக்கவில்லை. சொந்தமாக தொழில் தஞ்சையில் தொடங்கியதும் அவர்களைபற்றி விசாரித்தேன். வயதான துறவிகள் அமைதியாக பொழுதைக் கழிக்கவும், இறைவனைப்பற்றி எப்போதும் சிந்திக்கவும் அவர்களை ஊருக்கு வெளியே ஒரு பெரிய இல்லம் கட்டி, தங்க வைத்து இருக்கிறார்கள் என்றும், அங்கே சென்றால் தான் அவர்களைச் சென்று சந்திக்க முடியும் என்றும் கேள்விப்பட்டு சென்றேன். அங்கே சென்று பிரிட்ஜட் அம்மாவைப் பார்க்கவேண்டும் என்று சொன்னதும் உள்ளே சென்றார்கள் ஒரு இளம் துறவி. வயதானவர்களை கவனித்துக்கொள்ள இளம் துறவிகள் அங்கே பலர் உள்ளனர். சிறிது நேரத்தில் பிரிட்ஜட் அம்மா வந்தார்கள். எப்படிடா என்னைக் கண்டுபிடித்தாய், நான் இங்கு இருப்பதாக உனக்கு யார் சொன்னார்கள்? என்று கேட்டுக்கொண்டே வந்தார்கள். உங்களைப்பற்றி பல வருடங்களாக விசாரித்துக்கொண்டு இருக்கிறேன். கடைசியாக உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு இன்று தான் கிடைத்தது என்று சொன்னேன். மிகவும் மகிழ்ந்தார்கள். அடிக்கடி தொலைப்பேசியில் பேசு என்று சொல்லி, என்னை வாழ்த்தி அனுப்பினார்கள். தஞ்சையிலேயே இருப்பதால் அடிக்கடி சந்தித்துக் கொண்டு இருக்கிறேன்.

Friday, June 29, 2007

மன்னிப்பு

நான் என்னுடைய வாழ்க்கையில மன்னிப்பு கேக்கனும்னு நினைக்கிற ஆள் இருக்காங்க‌, அவளுடைய பெயர் போடலாமா வேண்டாமான்னு யோசனையா இருக்கு, ம்ம்ம் சரி என்னோட பழகுன நிறைய பேருக்கு அவளைத் தெரியாது, அதனால அவளோட பேரை கொஞ்சம் மாத்தி போடுறேன், ம்ம்ம் கார்த்தினு வச்சுக்குவோம். அப்போ நான் 9ம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன், அதுதான் நான் சொல்லி இருக்கேனே படிப்புல நாம பெரிய ஆளு இல்லீனு, அதனால எங்க அம்மா என்னை தனிப்படிப்புக்கு அனுப்புனாங்க, அங்க தான் அந்தப் பொண்ணு எனக்குத் தெரியும். அவ கூட சரியா நான் பழகுனதில்லை, அப்போ நான் பொண்ணுங்க கிட்ட பேச மாட்டேன். கொஞ்சம் கூச்சம், பயம். நான் போவேன், வகுப்பு முடிஞ்சவுடன், கிளம்பி வீட்டுக்கு வந்திடுவேன். என்னோட என்னோட அண்ணனும்( பெரியம்மா பையன்) வருவான். இருவரும் ஒரே வகுப்புதான். அங்க தான் எனக்கு பாரத் அப்படீன்னு ஒரு பையன் பழக்கமானான், இருவரும் நல்ல நண்பர்களானோம். இந்தப் பையன் அந்தப் பெண்ணை விரும்பினான்.

தனிப்படிப்பு வகுப்புகள் ஒன்றாகத் தான் நடந்தன. நாங்கள் பயின்றது ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில், அந்தப்பெண் பயின்றது பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், பள்ளி முடிந்தவுடன் நாங்கள் கிளம்பி நேராக தனிப்படிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து விடுவோம், அந்தப்பெண் சற்றுத் தாமதமாகத்தான் வருவாள். அவள் உள்ளே வரும் போது மாணவர்களின் கண்கள் அனைத்தும் நம் பையனை நோக்கித் திரும்பும், இனிமேல் நம் பையனின் பேர் சொல்லி அழைப்போம். அவன் பெயர் பாரத், அந்தப் பெண்ணின் பெயர் கார்த்தி. ஒரு விஷ‌ய‌ம் சொல்ல‌ ம‌ற‌ந்துட்டேன், கார்த்தியோட‌ அப்பா ஒரு போலீஸ்கார‌ர்.

நாங்க‌ளும் 10ம் வ‌குப்பு போனோம். த‌னிப்ப‌டிப்பு இட‌ம் மாறிப்போச்சு. பார‌த்துக்கு பிர‌பு என்னும் என்னுடைய‌ உற‌வுக்கார‌ரை அறிமுக‌ப்ப‌டுத்தினேன். அப்போ ஆர‌ம்பிச்சுது என‌க்கு பிர‌ச்ச‌னை. பிர‌பு அவ‌ன்கிட்ட‌ காத‌லுக்கு உத‌வுவ‌தாக‌ சொன்ன‌துட‌ன் இல்லாம‌ல் என்னையும் பிர‌ச்ச‌னையில் இழுத்துவிட்டார். என‌க்கு பிர‌புவிட‌ம் ம‌ரியாதை உண்டு. அவ‌ர் என்னைவிட‌ வ‌யதில் மூத்த‌வ‌ர். எங்க‌ளுக்கு அப்போது ந‌ல்ல‌ தோழ‌ர், ஆலோச‌க‌ர் எல்லாம் அவ‌ர்தான். அவ‌ர் சொன்ன‌தை ம‌றுக்க‌ முடியாம‌ல் நானும் ஒத்துழைக்க‌ வேண்டிய‌தாயிற்று. ஒத்துழைப்பு என்ப‌து அவ‌ர் சார்பாக‌ கார்த்தியிட‌ம் அவனின் காத‌லை எடுத்துரைப்ப‌து(அது காத‌ல் தானா என்று என‌க்கு இன்றும் ச‌ந்தேக‌ம் உண்டு). தேதி குறித்தா‌யிற்று. பிர‌பு என்னையும் இழுத்துக்கொண்டு அந்த‌ப் பெண் வ‌ழ‌க்க‌மாக‌ வ‌ரும் வ‌ழியில் போய் நின்றார். அந்த‌ப்பெண் எங்க‌ளைத் தாண்டிச்சென்ற‌தும் அவ‌ளைத் துர‌த்திக் கொண்டு மிதிவண்டியில் சென்றோம். பிர‌பு என்ன‌ செய்ய‌ப்போகிறார் என்று ம‌ண்டையைக் குழ‌ப்பிக் கொண்டிருந்தேன். அந்த‌ப் பெண்ணைத் தொட‌ர்ந்து பிர‌பு செல்ல‌, நான் ச‌ற்றுத் த‌ள்ளி சென்று கொண்டிருந்தேன். அவ‌ர் கார்த்தியை நெருங்கினார், அவ‌ளைத் தாண்டிச் சென்று கொண்டேயிருந்தார். நானும் வேக‌மாக‌ச் சென்று அவ‌ரிட‌ம் என்ன ஆன‌து என்றேன். அவ‌ளிட‌ம் சொல்லிவிட்டேன் என்றார். நான் திரும்பிப் பார்த்தேன் கார்த்தி என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ம‌றுநாள் என‌க்கு பெரிய‌ பிர‌ச்ச‌னை என்னுடைய‌ பெரிய‌ம்மா வ‌டிவில் வ‌ந்த‌து. அந்த‌ப் பெண் ப‌ய‌ந்து போய் என்னுடைய‌ பெரிய‌ம்மாவிட‌ம் சென்று அழுது, என்னை குற்றவாளி ஆக்கிச் சென்றுவிட்டாள். அதுவும் ஆசிரிய‌ர்க‌ள் அறையில் அனைவ‌ரும் இருக்கும் போது. என‌க்கு அங்குள்ள ஆசிரியைக‌ளிட‌ம் கொஞ்ச‌ம் ம‌ரியாதை உண்டு. அவை அத்த‌னையும் அத்தோடு போயிற்று, விஷ‌ய‌ம் ஊதி பெரிதாக்க‌ப்ப‌ட்டு, என்னுடைய‌ குடும்ப‌மே வ‌ந்து என்னை மொத்தி எடுத்த‌து தான் மிச்ச‌ம். நான் ஒரு பொறுக்கி போல‌ சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டு இருந்தேன்.

அந்த‌ப் பெண்ணை நான் குற்ற‌ம் சொல்ல‌ மாட்டேன். 15 வ‌ய‌தில் இருக்கும் பெண், அதுவும் த‌ஞ்சையில் இருக்கும் பெண், ப‌ய‌ந்து போய் இருப்பாள். நாங்க‌ள் செய்த‌து தான் த‌வ‌று என்று இப்போது புரிகிற‌து. இன்றும் இந்த‌ விஷ‌ய‌ம் தெரிந்த‌ சில‌ர் என்னைக் குற்ற‌வாளியைப் பார்ப்ப‌தும், ந‌ட‌ந்த‌ விஷ‌ய‌த்தைச் சொல்லி என்னைக் குத்திக்காட்டுவ‌தும் வேத‌னையாக‌ இருக்கும். அந்த‌ப் பெண்ணை என்றாவ‌து ஒருநாள் பார்த்து ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும் என்று தோன்றுகிற‌து.

Friday, June 15, 2007

திருட்டுக் கையெழுத்து

அப்போ நான் மூணாவது படிச்சுக்கிட்டு இருந்தேன். நான் தான் சொன்னேனே நமக்கு படிப்பு சரியா வராதுன்னு, மேலும் என்னோட அப்பா நான் ஒரு வயசுக் குழந்தையா இருக்கும் போதே இறந்துட்டதுனால நம்மக் குடும்பத்துல எல்லோருக்கும் நம்ம மேல தனிப்பாசம். யாரும் என்னைத் திட்ட மாட்டாங்க. ஆனா ஒருத்தரத் தவிர, அவரு என்னோட கடைசி மாமா, என்னைச் சின்ன வயசுல சும்மா வெளுத்து வாங்குவார். அடி சும்மா உங்க வீட்டு அடி, எங்க வீட்டு அடி இல்ல சும்மா பிரிச்சி மேய்ஞ்சுடுவார். நான் சரியா படிக்கிறது இல்ல அப்படீன்னு எங்க அம்மா அவர் கிட்ட சொல்லிட்டாங்க, அவரும் என்னை பயங்கரமா மிரட்டி வச்சிருந்தார். ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் அவர்கிட்ட ரிப்போர்ட் கார்டில் கையெழுத்து வாங்கனும். இரண்டு மூன்று தேர்வுகள் பரவாயில்லாமல் சென்றன. அது இரண்டாவது இடைத்தேர்வு என்று நினைக்கிறேன். பரிட்சையில் மதிப்பெண் சரியில்லை அதாவது ஃபெயில், இரவு அம்மவிடம் ரிப்போர்ட் கார்டைக் காட்டினேன். அம்மாவிடம் பயங்கரத் திட்டு, அடி மட்டும் விழவில்லை. அம்மா கையெழுத்து போட மறுத்துவிட்டார்கள். காலை மாமாவிடம் வாங்கச்சொல்லி உத்தரவு. காலை எழுந்து, பள்ளிக்கு கிளம்பினேன், பள்ளிக்குச் செல்லும் வழியில் தான் மாமாவின் வீடு, என்ன செய்வது என்று புரியவில்லை, மாமாவின் அடியை நினைத்தாலே பயம், மாமாவிடம் கையெழுத்து வாங்காமலேயெ பள்ளிக்கு சென்றுவிட்டேன், முதல் பீரியடில் வகுப்பு ஆசிரியையிடம் கொடுக்க வேண்டும். என்ன செய்வது என்று தெரியவில்லை, என்னோட வகுப்பு பசங்கள் எல்லோரும் காலை அசெம்பிளிக்குச் சென்றனர், நான் அப்படியே என்னோட மேசைக்கு கீழே அமர்ந்து அப்படியே அச்சுப்பிசகாமல் என்னுடைய மாமா கையெழுத்தைப் போட்டுவிட்டேன். அது டீச்சரிடமும் கொடுக்கப்பட்டுவிட்டது.

மாலை எப்போதும் என்னுடைய பெரியம்மா வீட்டிற்கு படிக்கச் செல்வேன். அவர்கள் மேனிலைப்பள்ளி ஆசிரியை. படித்து முடித்து விட்டு வீட்டிற்கு வந்தால் என்னைடைய கடைசி மாமா என்னுடைய வீட்டில். எனக்கு திக்கென்று இருந்தது. என்னுடைய அம்மா அவரிடம் நான் வந்து கையெழுத்து வாங்கினேனா என்று விசாரிக்க அவர் இல்லையென்று சொல்ல, என்னைத் தேடி மாலை வீட்டிற்கு வந்துவிட்டார், நான் கையெழுத்துப் போட்ட விஷயம் யாருக்கும் தெரியாது. அவர் என்னைப் பார்த்தவுடன் என்னுடைய ரிப்போர்ட் கார்டைக் கேட்க, நான் திரு திருவென்று முழிக்க, அவரிடன் பின் நான் கையெழுத்துப் போட்டதைச் சொல்ல, எனக்கு செம அடி, என்னால் இன்னும் அந்த நாளை மறக்க முடியவில்லை, உங்களுக்கு விசிறி மட்டை தெரியுமா? பனையோலை வைத்து செய்யப்படுவது, அதைகொண்டு எனக்கு அடிவிழுந்தது. பயங்கர அடி, என்னுடைய கையில், காலில் என எங்கும். நான் கத்த அவர் அடிக்க, நான் அழுக அவர் அடிக்க என சிறிது நேரத்திற்கு சென்றது.

கொஞ்ச நேரம் கழித்து என்னைக் கூப்பிட்டு நான் எப்படி கையெழுத்துப் போட்டேன் என்றுக் கேட்டார், அதற்கு நான் அவருடையக் கையெழுத்தை அச்சுப்பிசகாமல் அவரிடமே போட்டுக் காண்பிக்க(பயங்கர ஞாபகசக்தி) அவர் தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்...

வசந்தகாலம்

நம் பள்ளிக்கால நினைவுகள் என்றுமே சுகமானவை. நான் ஒன்னும் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவன் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஐந்தாம் வகுப்பு வரை காலாண்டு, அரையாண்டு என அனைத்துத் தேர்வுகளிலும் தோல்வி அடைந்து இறுதித்தேர்வில் மட்டும் கஷ்டப்பட்டு கரையேறும் கதை தான். நான் தோல்வி பெற முக்கியக் காரணம் இந்தி. அப்போ நான் மத்த பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் அவ்வப்போது எடுத்தாலும் இந்தியில் மட்டும் 10 அல்லது 15 க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்ததில்லை. நமக்கு என்னவோ அப்போ இந்தி(டீச்சர்) மேல அவ்வளவு கடுப்பு. எப்போ பார்த்தாலும் அடிச்சிக்கிட்டே இருப்பாங்க. நாம என்ன பண்றது, அடிப்படை ஆனா, ஆவன்னாவே நமக்கு வராது ஆனா அவுங்க ஒரு வாக்கியம் தப்பில்லாம எழுத சொல்றாங்க. ஒரு வார்த்தை நான் முயற்சி பண்ணினாலே அதுல நாலு தப்பு வரும். அவுங்க அடிக்கிறதும், வகுப்பை விட்டு வெளியே அனுப்புறதும், முட்டி போட வைக்கிறதும்னு அவுங்களும் என்னென்னவோ செஞ்சி பாத்தாங்க ஆனா அவுங்களால என்ன ஒரு வாக்கியம் கூட எழுத வைக்க முடியல. அப்பவே தமிழ் மேல அவ்வளவு பற்று!!! நல்லவேளை ஐந்தாம் வகுப்பில் இந்தி கிடையாது பிரச்சனை இல்லாமல் வருடம் போனது. ஐந்தாம் வகுப்பில் தான் நான் எந்தத் தேர்விலும் தோல்வியைத் தழுவாமல் வருடத்தை முடித்தேன்.

என்னோட அம்மாவுக்கு அப்போ ஒரு பெரிய கெட்ட பழக்கம் உண்டு. அவ்வப்போது பள்ளிக்கு வந்து வீட்டில் நாம் செய்யும் வீரப்பிராதபங்களைப் பற்றி என்னோட ஆசிரியைகளிடம் போட்டுக் கொடுப்பது. ஆனால் என்னோட ஆசிரியை சொல்ற பதிலைக் கேட்டு என்னோட அம்மா அதிகமா ஆச்சிரியப்படுவாங்க, சார்லஸா அவன் இருக்குற இடமே தெரியாதே, ரொம்ப அமைதியான பையனாச்சேனு பதில் வரும் என்னோட ஆசிரியையிடமிருந்து, ஆனா நான் வீட்டில் பண்ணுகிற அட்டுழியம் அதிகம், எனக்கு கோபம் அதிகமாக வரும், அப்போது கையில் கிடைக்கும் அனைத்தும் உடையும். தெருவில் சண்டைப்போடுவது, ஒழுங்காகப் படிப்பது கிடையாது என எல்லா அட்டுழியங்களும் நடந்தன. எனக்குப் பல விஷயங்கள் இப்போது ஞாபகம் இல்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் எப்போதும் என் மனதில் நிலைத்து இருக்கும். அது என்னுடைய ரிப்போட் கார்டில் நான் கையெழுத்துப் போட்டது!!!