Friday, June 29, 2007

மன்னிப்பு

நான் என்னுடைய வாழ்க்கையில மன்னிப்பு கேக்கனும்னு நினைக்கிற ஆள் இருக்காங்க‌, அவளுடைய பெயர் போடலாமா வேண்டாமான்னு யோசனையா இருக்கு, ம்ம்ம் சரி என்னோட பழகுன நிறைய பேருக்கு அவளைத் தெரியாது, அதனால அவளோட பேரை கொஞ்சம் மாத்தி போடுறேன், ம்ம்ம் கார்த்தினு வச்சுக்குவோம். அப்போ நான் 9ம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன், அதுதான் நான் சொல்லி இருக்கேனே படிப்புல நாம பெரிய ஆளு இல்லீனு, அதனால எங்க அம்மா என்னை தனிப்படிப்புக்கு அனுப்புனாங்க, அங்க தான் அந்தப் பொண்ணு எனக்குத் தெரியும். அவ கூட சரியா நான் பழகுனதில்லை, அப்போ நான் பொண்ணுங்க கிட்ட பேச மாட்டேன். கொஞ்சம் கூச்சம், பயம். நான் போவேன், வகுப்பு முடிஞ்சவுடன், கிளம்பி வீட்டுக்கு வந்திடுவேன். என்னோட என்னோட அண்ணனும்( பெரியம்மா பையன்) வருவான். இருவரும் ஒரே வகுப்புதான். அங்க தான் எனக்கு பாரத் அப்படீன்னு ஒரு பையன் பழக்கமானான், இருவரும் நல்ல நண்பர்களானோம். இந்தப் பையன் அந்தப் பெண்ணை விரும்பினான்.

தனிப்படிப்பு வகுப்புகள் ஒன்றாகத் தான் நடந்தன. நாங்கள் பயின்றது ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில், அந்தப்பெண் பயின்றது பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், பள்ளி முடிந்தவுடன் நாங்கள் கிளம்பி நேராக தனிப்படிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து விடுவோம், அந்தப்பெண் சற்றுத் தாமதமாகத்தான் வருவாள். அவள் உள்ளே வரும் போது மாணவர்களின் கண்கள் அனைத்தும் நம் பையனை நோக்கித் திரும்பும், இனிமேல் நம் பையனின் பேர் சொல்லி அழைப்போம். அவன் பெயர் பாரத், அந்தப் பெண்ணின் பெயர் கார்த்தி. ஒரு விஷ‌ய‌ம் சொல்ல‌ ம‌ற‌ந்துட்டேன், கார்த்தியோட‌ அப்பா ஒரு போலீஸ்கார‌ர்.

நாங்க‌ளும் 10ம் வ‌குப்பு போனோம். த‌னிப்ப‌டிப்பு இட‌ம் மாறிப்போச்சு. பார‌த்துக்கு பிர‌பு என்னும் என்னுடைய‌ உற‌வுக்கார‌ரை அறிமுக‌ப்ப‌டுத்தினேன். அப்போ ஆர‌ம்பிச்சுது என‌க்கு பிர‌ச்ச‌னை. பிர‌பு அவ‌ன்கிட்ட‌ காத‌லுக்கு உத‌வுவ‌தாக‌ சொன்ன‌துட‌ன் இல்லாம‌ல் என்னையும் பிர‌ச்ச‌னையில் இழுத்துவிட்டார். என‌க்கு பிர‌புவிட‌ம் ம‌ரியாதை உண்டு. அவ‌ர் என்னைவிட‌ வ‌யதில் மூத்த‌வ‌ர். எங்க‌ளுக்கு அப்போது ந‌ல்ல‌ தோழ‌ர், ஆலோச‌க‌ர் எல்லாம் அவ‌ர்தான். அவ‌ர் சொன்ன‌தை ம‌றுக்க‌ முடியாம‌ல் நானும் ஒத்துழைக்க‌ வேண்டிய‌தாயிற்று. ஒத்துழைப்பு என்ப‌து அவ‌ர் சார்பாக‌ கார்த்தியிட‌ம் அவனின் காத‌லை எடுத்துரைப்ப‌து(அது காத‌ல் தானா என்று என‌க்கு இன்றும் ச‌ந்தேக‌ம் உண்டு). தேதி குறித்தா‌யிற்று. பிர‌பு என்னையும் இழுத்துக்கொண்டு அந்த‌ப் பெண் வ‌ழ‌க்க‌மாக‌ வ‌ரும் வ‌ழியில் போய் நின்றார். அந்த‌ப்பெண் எங்க‌ளைத் தாண்டிச்சென்ற‌தும் அவ‌ளைத் துர‌த்திக் கொண்டு மிதிவண்டியில் சென்றோம். பிர‌பு என்ன‌ செய்ய‌ப்போகிறார் என்று ம‌ண்டையைக் குழ‌ப்பிக் கொண்டிருந்தேன். அந்த‌ப் பெண்ணைத் தொட‌ர்ந்து பிர‌பு செல்ல‌, நான் ச‌ற்றுத் த‌ள்ளி சென்று கொண்டிருந்தேன். அவ‌ர் கார்த்தியை நெருங்கினார், அவ‌ளைத் தாண்டிச் சென்று கொண்டேயிருந்தார். நானும் வேக‌மாக‌ச் சென்று அவ‌ரிட‌ம் என்ன ஆன‌து என்றேன். அவ‌ளிட‌ம் சொல்லிவிட்டேன் என்றார். நான் திரும்பிப் பார்த்தேன் கார்த்தி என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ம‌றுநாள் என‌க்கு பெரிய‌ பிர‌ச்ச‌னை என்னுடைய‌ பெரிய‌ம்மா வ‌டிவில் வ‌ந்த‌து. அந்த‌ப் பெண் ப‌ய‌ந்து போய் என்னுடைய‌ பெரிய‌ம்மாவிட‌ம் சென்று அழுது, என்னை குற்றவாளி ஆக்கிச் சென்றுவிட்டாள். அதுவும் ஆசிரிய‌ர்க‌ள் அறையில் அனைவ‌ரும் இருக்கும் போது. என‌க்கு அங்குள்ள ஆசிரியைக‌ளிட‌ம் கொஞ்ச‌ம் ம‌ரியாதை உண்டு. அவை அத்த‌னையும் அத்தோடு போயிற்று, விஷ‌ய‌ம் ஊதி பெரிதாக்க‌ப்ப‌ட்டு, என்னுடைய‌ குடும்ப‌மே வ‌ந்து என்னை மொத்தி எடுத்த‌து தான் மிச்ச‌ம். நான் ஒரு பொறுக்கி போல‌ சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டு இருந்தேன்.

அந்த‌ப் பெண்ணை நான் குற்ற‌ம் சொல்ல‌ மாட்டேன். 15 வ‌ய‌தில் இருக்கும் பெண், அதுவும் த‌ஞ்சையில் இருக்கும் பெண், ப‌ய‌ந்து போய் இருப்பாள். நாங்க‌ள் செய்த‌து தான் த‌வ‌று என்று இப்போது புரிகிற‌து. இன்றும் இந்த‌ விஷ‌ய‌ம் தெரிந்த‌ சில‌ர் என்னைக் குற்ற‌வாளியைப் பார்ப்ப‌தும், ந‌ட‌ந்த‌ விஷ‌ய‌த்தைச் சொல்லி என்னைக் குத்திக்காட்டுவ‌தும் வேத‌னையாக‌ இருக்கும். அந்த‌ப் பெண்ணை என்றாவ‌து ஒருநாள் பார்த்து ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும் என்று தோன்றுகிற‌து.

3 comments:

Divya said...

\\என்னுடைய‌ குடும்ப‌மே வ‌ந்து என்னை மொத்தி எடுத்த‌து தான் மிச்ச‌ம். நான் ஒரு பொறுக்கி போல‌ சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டு இருந்தேன்.\

\\இன்றும் இந்த‌ விஷ‌ய‌ம் தெரிந்த‌ சில‌ர் என்னைக் குற்ற‌வாளியைப் பார்ப்ப‌தும், ந‌ட‌ந்த‌ விஷ‌ய‌த்தைச் சொல்லி என்னைக் குத்திக்காட்டுவ‌தும் வேத‌னையாக‌ இருக்கும்.\\

இந்த வரிகளை படிக்கும் போது, மனதளவில் நீங்க எவ்வளவு பாதிக்க பட்டிருக்கிறிங்க 'அந்த' சம்பவத்தால் என உணர முடிந்தது,
சில ஆறாத ரணங்கள்.....மறைவது கடினம், இல்லியா??

\\அந்த‌ப் பெண்ணை என்றாவ‌து ஒருநாள் பார்த்து ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும் என்று தோன்றுகிற‌து.\\

உங்களது எண்ணத்தை வரவேற்கிறேன்,
மன்னிப்பு கேட்கும் சந்தர்பம் கிடைக்க என் வாழ்த்துக்கள்!

[Crawled into your blog from JK's comments page]

கார்த்திகைப் பாண்டியன் said...

சின்ன வயது தவறுகள் எப்போதுமே நம்மை துரத்தக் கூடியவை.. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியதே பெரிதுதான்.. கவலைப்பட வேண்டாம்.. தொடர்ந்து அனுபவங்களை எழுதுங்கள்..

Anto said...

Enakum Ithu pondru ovuvaridam manippu katka vandi irukirathu...


Endravathu oru nal neenga antha ponnukita manippu ketaka time kidika, i pray for u